Friday, 10 May 2013

தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்


தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்



வீரம் செறிந்த விளையாட்டான வாள் சண்டை, மல்யுத்தம், குதிரையேற்றம், ஜல்லிகட்டு, மல்லர் விளையாட்டு என நம் முன்னோர்கள் சிறப்பு பெற்றிருந்தனர். அவற்றில் மிக சிறப்பான விளையாட்டு மல்லர் கம்பம். சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலை சிறந்த மல்லர்கள் இருந்தார்கள். மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலை சிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லன் என பெருமையோடு அழைக்கப்பட்டான்.


பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.சிலம்பம், களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.


தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய
கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.


வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.
மல்லர் கம்பம் யோகாசனம், தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.


சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.
மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.


பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.
இதுபோல் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.


விழுப்புரம் அருகே உள்ள வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த உலகதுரை என்ற உடற்பயிற்சி ஆசிரியர் மல்லர் விளையாட்டுப் பயிற்சியை முடித்தபின் மாணவர்களுக்கும், கிராமபுற இளைஞர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்தார். தமிழகம் முழுவதும் 200 மல்லர் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்  தான் தமிழ்நாட்டுக்கு மல்லர் விளையாட்டை நிறுவியவர் .
தற்காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராட்டிர மாநிலத்துப் பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்ட விளையாட்டே சிறப்புற்று விளங்குகிறது. நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள் பங்கு கொள்வர்.
கயிற்றில் தொங்கி வித்தை காட்டும் விளையாட்டுகளில் பெண்கள் பங்குகொள்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.


மல்லர் கம்பம் பயிற்சி பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்
1.     உடலின் அனைத்து தசைகளும் வலுப்பெறும்


2.     யோகாஆசனத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்

3.     மனதளவில் தைரியம் நம்பிககை உருவாக்கும்


4.     Cardio-respiratory Endurance அதிகமாகும்


5.     தலை கீழ் செய்வதால் ரத்த ஓட்டம் கீழ் இருந்து மேலாக செல்லும் இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தம் அதிகமாவதால் செயல்பாடு அதிகரிக்கும்.

6.     உடல் நோய் குறையும்